மேயர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அவர் கூறியதாவது:-

21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் பிப்ரவரி 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 15158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 5794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிக்கப்படும். சென்னையில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. 100 நபர்களுக்கு மிகாமல் உள் அரங்குகளில் கூட்டம் நடத்தலாம். தனி நபர் ரூ.50 ஆயிரம்வரை கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Next

نموذج الاتصال